CBSE Class 12 Chemistry Exam Tips!
> இந்த 8 சாப்டர்களை படிச்சா போதும்..மார்க் அள்ளலாம்: கடைசி நேர செக்லிஸ்ட்
CBSE Class 12 Chemistry Exam Strategy: தேர்வில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டால், சூத்திரங்களை எழுதுவதற்கும், வேதி வினைகளில் இடைநிலை நிலைகளை எழுதுவதற்கும் கூட பகுதி மதிப்பெண்கள் (Step marks) வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
CBSE Class 12 Chemistry Preparation Tips: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் 12-ஆம் வகுப்பு வேதியியல் (Chemistry) பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி 28 அன்று காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெற உள்ளது. வேதியியல் என்றாலே பல மாணவர்களுக்குச் சமன்பாடுகளும், ஃபார்முலாக்களும் சற்று சவாலாகத் தோன்றலாம். ஆனால், சரியான திட்டமிடலும், என்சிஇஆர்டி (NCERT) பாடப்புத்தகத்தின் மீதான பிடியும் இருந்தால், இப்பாடத்தில் 90%-க்கும் அதிகமான மதிப்பெண்களை மிக எளிதாகப் பெற முடியும்.
தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? வினாத்தாளை எவ்வாறு கையாள வேண்டும்? என்பதற்கான முழுமையான 'செக்லிஸ்ட்' இதோ உங்கள் பார்வைக்கு.
தேர்வை எதிர்கொள்ளும் முறை: சில முக்கிய குறிப்புகள்
வேதியியல் பாடத்தைப் பொறுத்தவரை முறையான திட்டமிடல் இருந்தால் எளிதாக மதிப்பெண் பெற முடியும். தேர்வுத் தாளை அணுகும் போது மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை:
கேள்விகளை ஆழமாக வாசியுங்கள். குறிப்பாக ஆர்கானிக் கெமிஸ்ட்ரி (Organic Chemistry) மாற்றங்கள் குறித்த கேள்விகளைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின் விடையளிக்கத் தொடங்குங்கள்.
இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி (Inorganic Chemistry) பிரிவில் பதில்கள் அப்படியே என்சிஇஆர்டி புத்தகத்தில் உள்ள கலைச்சொற்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
எந்தவொரு ஆர்கானிக் வினைக்கும் அதன் பெயர், பயன்படுத்தப்படும் காரணிகள் (Reagents), வினையின் சூழல் மற்றும் தேவைப்பட்டால் இடைநிலை சேர்மம் (Intermediate) ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
பிசிகல் கெமிஸ்ட்ரி கணக்குகளில் முதலில் சூத்திரத்தை (Formula) எழுதவும். மதிப்புகளைப் பிரதியிடும்போது அலகுகளை (Units) மறக்காமல் குறிப்பிட வேண்டும். இறுதி விடையைச் சரியான அலகோடு எழுதுவது அவசியம்.
வேதிச் சமன்பாடுகள் அனைத்தும் சரியாகச் சமன் (Balance) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதிக மதிப்பெண் வழங்கும் முக்கியப் பாடங்கள்
குறைந்த நேரமே இருந்தாலும், கீழே உள்ள பாடங்களுக்கு முதலிடம் கொடுத்துப் படிக்கவும்:
கரைசல்கள் (Solutions)
மின்வேதியியல் (Electrochemistry)
வேதி வினைவேகவியல் (Chemical Kinetics)
ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்
ஆல்கஹால்கள், பீனால்கள் மற்றும் ஈதர்கள்
அணைவுச் சேர்மங்கள் (Coordination Compounds)
d- மற்றும் f- தொகுதி தனிமங்கள்
அமீன்கள் (Amines)
பாடவாரியான முக்கியப் பகுதிகள்
*பிசிகல் கெமிஸ்ட்ரி (23 மதிப்பெண்கள்):*
இதில் நெர்ன்ஸ்ட் சமன்பாடு (Nernst Equation), கோல்ராஷ் விதி (Kohlrausch’s Law), முதல் வகை வினைகள் மற்றும் கரைசல் பண்புகள் (Colligative properties) ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஆர்கானிக் கெமிஸ்ட்ரி (26 மதிப்பெண்கள்):
பெயர் வினைகள் (Name reactions), சேர்மங்களை வேறுபடுத்தி அறியும் சோதனைகள், மற்றும் SN1, SN2 வினை வழிமுறைகள் மிக முக்கியமானவை.
இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி (14 மதிப்பெண்கள்):
படிகப்புலக் கொள்கை (Crystal Field Theory), மாற்றியம் (Isomerism), காந்தத் திருப்புத்திறன் கணக்கீடு மற்றும் IUPAC பெயரிடுதல் முறை ஆகியவற்றைப் பயிற்சி செய்யவும்.
வேகமாக நினைவுகூர சில குறுக்கு வழிகள் (Mnemonics):
வினைத்திறன் வரிசை (Reactivity Series): "Please Stop Calling Me A Careless Zebra Instead Try Learning How Copper Saves Gold" (K, Na, Ca, Mg, Al, Zn, Fe, Pb, H, Cu, Hg, Ag, Au).
லிங்கண்ட்களின் வலிமை: "I SCaN You Bravely Carry Mighty Flag" (I⁻, SCN⁻, Cl⁻, NH₃, en, CN⁻, CO).
கடைசி நேர செக்-லிஸ்ட்
தேர்வுக்குச் செல்லும் முன் இந்தத் தலைப்புகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்:
எட்டார்ட் வினை (Etard), கான்னிசாரோ வினை (Cannizzaro), ஹோஃப்மேன் புரோமமைடு சிதைவு, கோல்ப் வினை மற்றும் ரீமர்-டீமன் வினை.
டாலன்ஸ் சோதனை (Tollen’s), ஃபெலிங் சோதனை, கார்பைலமைன் சோதனை மற்றும் ஹின்ஸ்பெர்க் சோதனை.
வரைபடங்கள்: முதல் வகை வினைக்கான வரைபடம், கடத்துத்திறன் vs நீர்த்தல் வரைபடங்கள்.
என்.சி.இ.ஆர்.டி. புத்தகத்தின் பின்னால் உள்ள வினாக்கள் மற்றும் 'Reasoning' வகை கேள்விகளைத் தவிர்க்க வேண்டாம்.
தேர்வு நேர மேலாண்மை
தேர்வு அறையில், உங்களுக்கு நன்கு தெரிந்த ஆர்கானிக் அல்லது பிசிகல் கெமிஸ்ட்ரி பகுதியில் இருந்து எழுதத் தொடங்குங்கள். கணக்கீடுகளை ஆரம்பத்திலேயே போட்டு முடிப்பது பதற்றத்தைக் குறைக்கும். கடைசி 15 நிமிடங்களை அலகுகள், சமன்பாடுகள் மற்றும் வரைபடங்களைச் சரிபார்க்க ஒதுக்குங்கள். கடினமான கேள்விகளுக்குக் கூட சூத்திரங்களை எழுதினால் 'ஸ்டெப் மார்க்ஸ்' கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- அமைப்பு:TCA
Thank you







0 Comments:
Post a Comment